வாசிம் தாஜூடீன் படுகொலை வாகனங்கள் குறித்து விசாரணை

தாஜூடீன் படுகொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ள பிரதிசொலிசிட்டர் ஜெனரல் கொலை இடம்பெற்ற தினத்தன்று அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட நான்கு வாகனங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய இராணுவ கடற்படை அதிகாரிகள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சார்பில் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார் இலங்கையின் பிரபல ரக்பி வீரர் வாசிம்தாஜூடீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட நான்கு வாகனங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என  சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.தாஜூடீன் படுகொலை தொடர்பி;ல் மூன்று சந்தேகநபர்களிற்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டமாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாரஹன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித்பெரேரா,முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அனுரசேனநாயக்க,முன்னாள் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ஆனந்தசமரசேகர ஆகியோரிற்கு எதிராகவே குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர்கள் குறித்த உத்தியோகபூர்வ ஆவணங்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தாஜூடீன் பயன்படுத்தி மடிக்கணிணி கையடக்கதொலைபேசி ஆகியவற்றை ஆராய்ந்த போதிலும் விசாரணைக்கு உதவியான விடயங்கள் எவையும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(Courtesy Virakesari)